ஐ.பி.எல். 2024: என்.சி.ஏ-விடம் இருந்து உடற்தகுதி சான்றிதழை பெற்றார் ரிஷப் பண்ட்..?
தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதிக்கான அனுமதிச்சான்றிதழை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் தற்போது மெல்ல மெல்ல உடல் தகுதியை மீட்டு வருகிறார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கேற்றவாரே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷப் பண்டை தக்கவைப்பதாக அறிவித்தது.
இதனால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியானது. மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கும் ரிஷப் பண்ட் விளையாடுவதை உறுதிபடுத்தினார்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் ரிஷப் பண்ட் தற்போது 100 சதவீதம் உடல் தகுதியை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவருக்கு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் அனுமதி அளித்து உடற்தகுதிக்கான சான்றிதழையும் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை அடுத்து ரிஷப் பண்ட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.