விரைவில் விக்கெட்டுகளை இழந்து எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம் - டேவிட் வார்னர்


விரைவில் விக்கெட்டுகளை இழந்து எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம் - டேவிட் வார்னர்
x

image courtesy: Delhi Capitals via ANI

விரைவில் விக்கெட்டுகளை இழந்து எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

சென்னை,

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி பாராட்டினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து 7-வது வெற்றியை ருசித்ததுடன் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றையும் நெருங்கியது. இதில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 140 ரன்னில் அடங்கி 7-வது தோல்வியை சந்தித்ததால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போனது. சென்னை அணியின் வெற்றியில் பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். 21 ரன்கள் எடுத்ததுடன் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய சென்னை அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில், 'இரண்டாவது பாதியில் பந்து நன்கு சுழன்றது. எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தில் தையல் போடப்பட்டு இருக்கும் பகுதியை பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த ஆடுகளத்தில் எத்தனை ரன்கள் சிறந்ததாக இருக்கும் என்பது தெரியாததால் தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்துவதை காட்டிலும் ரன் கொடுக்காமல் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி அளிப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு பவுலர்களை அறிவுறுத்தினேன். அதன்படி செயல்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்தது.

நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம். இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் சில ஷாட்களை ஆடுவதை தவிர்க்க வேண்டும். இந்த ஆட்டத்தில் மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பேட்டிங் செய்ய போதிய வாய்ப்பு கிடைத்தது நல்ல விஷயமாகும். ஏனெனில் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டுகையில் அணியில் இருக்கும் எல்லோரும் கொஞ்சமாவது பந்துகளை எதிர்கொண்டு இருக்க வேண்டும். என்னுடைய பணி குறைந்த பந்துகளை எதிர்கொண்டாலும் அதில் அதிக ரன்களை எடுக்க வேண்டியதாகும். என்னை அதிகமாக ஓட வைக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். எத்தனை பந்துகளை சந்தித்தாலும் அதில் அணியின் வெற்றிக்காக என்னுடைய பங்களிப்பை அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை மனதில் கொண்டு தான் பயிற்சி செய்கிறேன்' என்றார்.

தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கருத்து தெரிவிக்கையில், 'பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) நாங்கள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தோம். அப்போதே ஆட்டம் எங்கள் கையை விட்டு போய்விட்டது. இந்த சீசனில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுக்கும் தவறை நாங்கள் 5 அல்லது 6-வது முறையாக செய்து இருக்கிறோம். ரன்-அவுட் மூலம் கூட எளிதாக விக்கெட்டை தாரை வார்க்கிறோம். விரைவில் விக்கெட்டுகளை இழந்து எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம். 168 ரன்கள் என்பது எட்டிப்பிடிக்க கூடிய இலக்கு தான். நாங்கள் நல்ல தொடக்கம் கண்டு இருக்க வேண்டும். அத்துடன் ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்று இருந்தால் இந்த இலக்கை எட்டிப்பிடித்து இருக்கலாம். மிடில் ஓவர்கள் சிலவற்றில் நாங்கள் ஒரு ரன் கூட எடுக்க தடுமாறினோம். நாங்கள் பந்தை சரியான திசையில் விரட்டி ரன் எடுக்க தவறிவிட்டோம்' என்றார்.


Next Story