சர்வதேச டி20 கிரிக்கெட்: முதல் இந்திய வீரராக மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கும் சாஹல்...!


சர்வதேச டி20 கிரிக்கெட்: முதல் இந்திய வீரராக மிகப்பெரிய சாதனையை படைக்க காத்திருக்கும் சாஹல்...!
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 6 Aug 2023 8:10 AM IST (Updated: 6 Aug 2023 12:40 PM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 1-0 என தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள யுஸ்வேந்திர சாஹல் முதல் டி20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த சாதனையை அவர் இந்த தொடரிலேயே செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சாஹல் இதுவரை 76 டி20 போட்டிகளில் பங்கேற்று 93 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலராக முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து புவனேஸ்வர் குமார் 90 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், அஸ்வின் 72 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹல் இந்த தொடரில் மேலும் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக வங்காளதேசம் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷாஹிப் அல் ஹசன் 140 விக்கெட்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 134 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், ரஷீத் கான் 130 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story