உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி - 20 ஆண்டுக்கு பிறகு தமிழக வீரர்களுக்கு இடமில்லை...!
உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணாவை தவிர மற்ற வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பெறாதது தமிழக ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது. கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை அணியில் தமிழர்கள் இடம் பெறாதது இதுவே முதல் முறையாகும். அதாவது, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 20 ஆண்டுக்கு பிறகு தமிழக வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
கடந்த 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் அணியில் தினேஷ் கார்த்திக், 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின், 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகிய தமிழக வீரர்கள் அங்கம் வகித்தது நினைவு கூரத்தக்கது.
வரும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட வேளையில் அவர் இடம் பெறாததால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர் .