இங்கிலாந்தில் இந்திய அணி பயிற்சி கிரிக்கெட் - ரிஷப் பண்ட் அரைசதம்


இங்கிலாந்தில் இந்திய அணி பயிற்சி கிரிக்கெட் - ரிஷப் பண்ட் அரைசதம்
x

லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது.

லீசெஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 8 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. கே.எஸ்.பரத் 70 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். 2-வது நாளான நேற்று இந்தியா முந்தைய நாள் ஸ்கோருடன் (246 ரன்) டிக்ளேர் செய்தது.

இதையடுத்து லீசெஸ்டர்ஷைர் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. எதிரணியிலும் சில இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டிருந்ததால் அவர்களின் பேட்டிங் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் புஜாரா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதே சமயம் மட்டையை தடாலடியாக சுழட்டி கவனத்தை ஈர்த்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 76 ரன்கள் (87 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) நொறுக்கினார். அவர் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இறுதியில் லீசெஸ்டர்ஷைர் அணி முதல் இன்னிங்சில் 57 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 2 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மான் கில் 38 ரன்னில் வெளியேறினார். எஸ்.பரத் (31 ரன்), ஹனுமா விஹாரி (9 ரன்) களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story