இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி டி20 ஆட்டம்: பெங்களூருவில் இன்று மோதல்


இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி டி20 ஆட்டம்:  பெங்களூருவில் இன்று மோதல்
x
தினத்தந்தி 17 Jan 2024 4:30 AM IST (Updated: 17 Jan 2024 4:31 AM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 7 சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி 6 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

பெங்களூரு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலி மற்றும் இந்தூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் முதலாவது ஆட்டத்தில் நிர்ணயித்த 159 ரன் இலக்கை 17.3 ஓவரிலும், 2-வது ஆட்டத்தில் நிர்ணயித்த 173 ரன் இலக்கை 15.4 ஓவரிலும் இந்தியா எட்டிப்பிடித்து அசத்தியது.

இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நன்றாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோர் அரைசதம் அடித்தனர். அதிரடியாக ஆடிய விராட்கோலி 16 பந்துகளில் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஆட்டத்தில் ரன் கணக்கை தொடங்கும் முன்பு 'ரன்-அவுட்' ஆன கேப்டன் ரோகித் சர்மா அடுத்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே போல்டு ஆனார். இதனால் இந்த ஆட்டத்தில் அவர் அதிரடியில் பட்டையை கிளப்புவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனில் கடந்த ஆட்டங்களில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படக்கூடும். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா இடத்தில் சஞ்சு சாம்சம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானும் இடம் பெற வாய்ப்புள்ளது.

இப்ராகிம் ஜட்ரன் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முந்தைய ஆட்டங்களில் செய்த தவறுகளை களைந்து வலுவாக மீண்டு வர முயற்சிக்கும். இருப்பினும் உள்ளூரில் இந்திய அணிக்கு சவால் அளிக்க வேண்டும் என்றால் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் ஆப்கானிஸ்தான் அணி ஒருசேர எழுச்சி காண வேண்டியது அவசியமானதாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 7 சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி 6 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. அந்த அணிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை ருசிக்க ஆப்கானிஸ்தான் அணி எல்லா வகையிலும் மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம்இருக்காது.

சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பெங்களூருவில் தற்போது இரவில் அதிக பனிப்பொழிவு இருப்பதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு அனுகூலமாக அமையலாம். எனவே இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்குவகிக்கக்கூடும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, ஷிவம் துபே, ஜிதேஷ் ஷர்மா அல்லது சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் அல்லது, ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ், முகேஷ் குமார்

ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), குல்படின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, நஜ்புல்லா ஜட்ரன், கரிம் ஜனாத், முஜீப் ரகுமான், நூர் அகமது அல்லது கியாஸ் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story