இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் முதலாவது டி20 கிரிக்கெட் - சென்னையில் இன்று நடக்கிறது


இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் முதலாவது டி20 கிரிக்கெட் - சென்னையில் இன்று நடக்கிறது
x

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.

சென்னை,

லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், சென்னையில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருவதுடன், தொடரை வெற்றியுடன் தொடங்க ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதற்கிடையே, இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை (ஜி ஸ்டாண்டு மேல் தளம், ரூ.100) ஸ்டேடியத்தில் உள்ள 11-ம் நம்பர் நுழைவு வாயிலில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,300 டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story