இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களுக்கு அனுமதிக்க பரிசீலிக்க வேண்டும்- ஸ்டீபன் பிளெமிங்


இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களுக்கு அனுமதிக்க பரிசீலிக்க வேண்டும்- ஸ்டீபன் பிளெமிங்
x

Image Courtesy: BCCI  

வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும் என பிளெமிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி அளிப்பது குறித்து பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் ஐபிஎல் போல பல்வேறு லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை என டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.

இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நமது வீரர்களை அனுமதிப்பதில்லை. இந்திய வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாட விரும்பினாலும் இந்திய கிரிக்கெட்டிலிருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும்.

மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் அந்த அனுபவம் அவர்களுக்கு அனைத்து ஐசிசி தொடர்களில் பெரிதும் உதவுகிறது. அதே போல் இந்திய மண்ணில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவங்களை கொண்டு வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தியாவில் இருதரப்பு தொடர்களிலும் சிறப்பாக விளையாடுகின்றனர்.

இதனால் இந்திய வீரர்களையும் வெளிநாட்டு தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், " வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உதாரணமாக அடிலெய்டில் அலெக்ஸ் ஹேல்ஸின் அனுபவம் இங்கிலாந்துக்கு கைகொடுத்துள்ளது. பல தனியார் உள்நாட்டு லீக்குகளில் ஆடி பல வீரர்களும் அனுபவம் பெற்று வருகின்றனர்.

அடுத்த உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அப்போது மேற்கிந்திய தீவுகளின் மைதானத்தின் பரிமாணங்கள், காலநிலை, பிட்சின் தன்மை, எந்த முனையில் எப்படி வீசுவது போன்ற விஷயங்களில் அனுபவம் பெற கரீபியன் பிரீமியர் லீக்கில் வீரர்கள் விளையாடினால் அது சிறந்த அனுபவமாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் ஒரு சாதகமான விஷயமே. இப்படி பல மைதானங்களில் ஆடினால்தான் வீரர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள முடியும்" என்றார்.


Next Story