இறுதிப்போட்டியில் இந்திய அணி சுதந்திரமாக விளையாட வேண்டும் - சவுரவ் கங்குலி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று கங்குலி அறிவுறுத்தி இருக்கிறார்.
கொல்கத்தா,
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது,
ரோகித் சர்மாவை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் கூட இல்லை. ஆனால் அதே நபர் தற்போது தோல்வியே சந்திக்காமல் இந்திய அணியை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2 உலகக் கோப்பையில் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்து இருக்கிறது.
இது அவரது கேப்டன்ஷிப் தரத்தை பறைசாற்றுகிறது. நான் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் போது அதிக வற்புறுத்தலுக்கு பிறகே அவர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தற்போது அவரது தலைமையில் இந்திய அணியின் வளர்ச்சியை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் அவர் 5 முறை கோப்பையை வென்றுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். சில சமயங்களில் ஐ.பி.எல். கோப்பையை வெல்வது மிகவும் கடினமாக இருக்கும்.
அதற்காக சர்வதேச கிரிக்கெட்டை காட்டிலும் ஐ.பி.எல். பெரியது என்று அர்த்தம் கிடையாது. ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற நீங்கள் 12-13 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது இருக்கும். ஆனால் உலகக் கோப்பையை சொந்தமாக்க 8-9 ஆட்டங்களில் வென்றாலே போதுமானதாகும். உலகக் கோப்பையை வெல்வதில் தான் கவுரவம் அதிகம் இருக்கிறது. நாளை (இன்று) ரோகித் உலகக் கோப்பையை வெல்வார் என்று நம்புகிறேன்.
7 மாதங்களுக்குள் 2-வது முறையாக உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைய அவர் விரும்பமாட்டார். அப்படி நடந்தால் அவர் அனேகமாக பார்படோஸ்சில் உள்ள கடலில் குதித்து விடுவார். அணியை முன்னின்று வழிநடத்தும் அவர் அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார், அது இறுதி ஆட்டத்திலும் தொடரும் என்று நம்புகிறேன்.
உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி நெருக்கடி இன்றி சுதந்திரமாக விளையாட வேண்டும். இந்த போட்டித் தொடரின் சிறந்த அணி இந்தியா தான். அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பெரிய போட்டிகளை வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. அது அவர்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன். விராட் கோலி தொடக்க ஆட்டக்காராக தொடர வேண்டும்.
அவர் 50 ஓவர் உலகக் கோப்பையில் 700 ரன்கள் எடுத்திருந்தார். அவரும் ஒரு மனிதர் தான். சில சமயங்களில் அவருக்கும் அடி சறுக்கும். அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 3-4 ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை என்பதற்காக அவரை பலவீனமான வீரர் என்று முத்திரை குத்தி விடாதீர். இவ்வாறு அவர் கூறினார்.