டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை அறிமுகம்


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இம்பேக்ட் வீரர் விதிமுறை அறிமுகம்
x

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஐ.பி.எல். போன்று புதுமையான, தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.

சென்னை,

7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி தொடங்கி ஜூலை 12-ந்தேதி வரை கோவை, சேலம், திண்டுக்கல், நெல்லை ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை தயார்படுத்தும் பணி நடைபெறுவதால் இந்த முறை டி.என்.பி.எல். கிரிக்கெட் சேப்பாக்கத்தில் இடம்பெறவில்லை.

இதில் நடப்பு சாம்பியன்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 12-ந்தேதி கோவையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் ஐ.பி.எல். போன்று புதுமையான, தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதி முறை (இம்பேக்ட்) அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது ஆட்டத்தின் பாதியில் ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்கலாம். மாற்று வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீச முடியும். இதன் மூலம் போட்டி மேலும் விறுவிறுப்படையும். இதே போல் முதல்முறையாக டி.ஆர்.எஸ். தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் டி.ஆர்.எஸ்.-ல் வைடு மற்றும் நோபால் குறித்து அப்பீல் செய்ய முடியாது. இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா தெரிவித்தார்.


Next Story