ஒரு குழந்தை வேண்டும் என நீங்கள் விரும்பினால்... தோனி பற்றி சாக்சியின் பழைய வீடியோ வைரல்
அவருக்கு கிரிக்கெட் முக்கியம். எனக்கு அவர் முக்கியம். அதனால், அவர் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறாரோ, அதுவே என்னுடைய முன்னுரிமையும் ஆகும் என்று சாக்சி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள எம்.எஸ். தோனிக்கென்று ரசிகர்கள் பட்டாளம் இந்தியா முழுவதும் நிறைந்துள்ளனர். இந்நிலையில், அவரை பற்றி தோனியின் மனைவி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
2014-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென தோனி ஓய்வு முடிவை வெளியிட்டார். இதுபற்றி தோனியின் மனைவி சாக்சி அந்த வீடியோவில் கூறும்போது, அவர் ஓய்வு முடிவை எடுக்க போகிறார் என நாங்கள் குறிப்பால் உணர்ந்திருந்தோம் என்கிறார்.
நான் அவரிடம் கூறியது நன்றாக நினைவில் இருக்கிறது. நீங்கள் ஒரு குழந்தை வேண்டும் என விரும்பினால், ஏதேனும் ஒரு விளையாட்டு வடிவத்தில் இருந்து வெளியேற வேண்டும். ஏனெனில், உங்களுடைய குழந்தையுடன் மகிழ்ச்சியாக கொண்டாட உங்களுக்கு நேரமே இல்லை என்று கூறியிருந்தேன்.
ஜிவா பிறந்தபோது, மருத்துவமனையில் இருந்த ஒவ்வொருவரும் உங்களுடைய கணவர் வரவிலை என்றனர். அதற்கு நான், அது ஒரு விசயமேயில்லை என்றேன். அவருக்கு கிரிக்கெட் முக்கியம். எனக்கு அவர் முக்கியம். அதனால், அவர் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறாரோ, அதுவே என்னுடைய முன்னுரிமையும் ஆகும் என்றேன்.
அவருடைய மனைவியாக நான் பல விசயங்களை தியாகம் செய்ய வேண்டும் என மக்கள் என்னிடம் கூறுகின்றனர். அதற்கு நான், அப்படியில்லை. அது அனைத்தும் அன்பு என கூறுவேன். நீங்கள் அன்பில் இருக்கும்போது, அதனை நீங்கள் தியாகம் என்று கூற முடியாது என்று வீடியோவில் சாக்சி கூறுகிறார்.
சென்னை சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோனி நேற்று விளையாட வரும்போது, ரசிகர்கள் எழுப்பிய சத்தம் அரங்கம் அதிரும் வகையில் இருந்தது. இந்நிலையில், சாக்சி முன்பு பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.