அவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமித்தால்... - பி.சி.சி.ஐ.யை எச்சரிக்கும் கில்கிறிஸ்ட்


அவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக நியமித்தால்... - பி.சி.சி.ஐ.யை எச்சரிக்கும் கில்கிறிஸ்ட்
x

image courtesy: PTI

நுணுக்கங்கள் ரீதியாக பாண்ட்யா இன்னும் கேப்டனாக வளரவில்லை என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். வரலாற்றில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனான பாண்ட்யா தலைமையில் நடப்பு சீசனில் தடுமாறி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 3-ல் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

முன்னதாக இந்த 5 கோப்பைகளை கேப்டனாக வென்ற ரோகித் சர்மா மும்பை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார். ஆனாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவதாக மும்பை நிர்வாகம் அறிவித்தது. குறிப்பாக மும்பை அணியில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியிலும் முதன்மை ஆல் ரவுண்டராக உருவெடுத்தார்.

இருப்பினும் 2022 சீசனில் மும்பை அணியால் விடுவிக்கப்பட்ட அவர் குஜராத் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்தார். அதன் காரணமாக அவரை வலுக்கட்டாயமாக குஜராத்திடமிருந்து வாங்கிய மும்பை தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது. அதற்கு ஆரம்பம் முதலே மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் சீசனில் மும்பை அணியின் தோல்விகளுக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத பாண்ட்யா கேப்டனாகவும் சுமாராக முடிவுகளை எடுத்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் ஏற்கனவே ரோகித் சர்மாவுக்கு அடுத்ததாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை பி.சி.சி.ஐ. தீர்மானித்துள்ளது. அதனாலேயே டி20 போட்டிகளில் சில காலம் ஓய்வெடுத்த ரோகித்துக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா பல தொடர்களில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.

இந்நிலையில் நுணுக்கங்கள் ரீதியாக பாண்ட்யா இன்னும் கேப்டனாக வளரவில்லை என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். எனவே அவரை டி20 அணியின் அடுத்த கேப்டனாக நியமித்தால் அது இந்தியாவை பாதாளதுக்கு தள்ளிவிடும் என்று பி.சி.சி.ஐ.யை மறைமுகமாக எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"நுணுக்கமான திட்டங்கள் ரீதியாக அவர் தனது வேலையை சரியாக செய்வதை நான் பார்க்கவில்லை. சில நேரங்களில் அவர் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள், பந்து வீச்சில் சில மாற்றங்கள் செய்கிறார். ஒட்டுமொத்தமாக கேப்டன்ஷிப்புக்கு தேவையான உத்திகளை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.


Next Story