ஆட்ட நாயகன் விருதை அவருக்கு கொடுக்க விரும்புகிறேன் - பாப் டு பிளெஸ்சிஸ்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பாப் டு பிளெஸ்சிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸ்சிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் குவித்தனர்.
பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
பெங்களூரு அணியின் இந்த வெற்றிக்கு அரைசதம் அடித்து அசத்திய கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் ஆட்ட நாயகனான தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய யாஷ் தயாளுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"என்ன ஒரு நம்ப முடியாத இரவு. இந்த சீசனை வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சி. இது நான் விளையாடிய கடினமான பிட்ச் என்று நினைக்கிறேன். அதனால் நானும் விராட் கோலியும் மழை வந்ததும் 140 - 150 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தோம். ஆனால் கடைசியில் நாங்கள் 200 ரன்கள் அடித்தது நம்ப முடியாதது. கடந்த 6 போட்டிகளில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார்கள்.
இந்த போட்டியில் கடைசியில் எம்.எஸ். தோனி இருந்தார். அவர் பலமுறை வெற்றிகரமாக பினிஷிங் செய்துள்ளார். இருப்பினும் கடைசி நேரத்தில் ஈரமான பந்தில் நாங்கள் நன்றாக வீசினோம். ஆட்டநாயகன் விருதை நான் யாஷ் தயாளுக்கு கொடுக்க விரும்புகிறேன். அவர் நம்ப முடியாத வகையில் பந்து வீசினார். கடைசி ஓவரில் வேகத்தை குறைத்து பந்து வீசியது அவருக்கு நம்ப முடியாத வகையில் வேலை செய்தது. நாங்கள் வெற்றி பெறாதபோது கூட எங்களுடைய ரசிகர்கள் இங்கே ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். 6 தொடர்ச்சியான வெற்றிகளால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளோம்" என்று கூறினார்.