ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்கு அந்த பிரச்சினையை வர விடமாட்டேன் - ஜெய்ஷா உறுதி
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு 2 முறையும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
மும்பை,
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சுவாரஸ்யத்தை கூட்ட கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள், டி20 உலகக்கோப்பைகள் போன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை ஐ.சி.சி. நடைமுறைப்படுத்தியது. இதனால் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் அணிக்கு சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படாது. மாறாக 2 வருடம் லீக் சுற்றில் விளையாடி புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
இதுவரை 2 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வென்றுள்ளன. இந்த 2 சீசனின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. இருப்பினும் 2 இறுதிப்போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
முன்னதாக அந்த தோல்விகளுக்கு ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 28-ம் தேதி முடிந்தது. ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கியது. அதனால் இந்திய வீரர்கள் முழுமையாக தயாராகாமல் பயிற்சிப் போட்டியில் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் களமிறங்கியது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அடுத்த (2025-ம் ஆண்டு) டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் இடையே குறைந்தது 15 நாட்கள் இடைவெளி இருக்கும் அளவுக்கு அட்டவணை தயாரிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். எனவே இம்முறை அந்தப் பிரச்சினை ஏற்படாது என்றும் அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "முந்தைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நமது அணி தாமதமாக செல்லவில்லை. இருப்பினும் நமக்கு வேறு வழி இல்லை. ஆனால் இப்போதிலிருந்து ஐபிஎல் தொடரின் முடிவுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இடையே நமக்கு 15 நாட்கள் இடைவெளி இருக்கும். இந்த நேரத்தில் கடந்த 2 இறுதிப்போட்டிகளில் விளையாட நாம் தகுதி பெற்றதை பாராட்ட வேண்டும்" என்று கூறினார்.