அந்த வீரரை கொல்கத்தா அணியிலிருந்து தவற விட்டதற்காக வருந்துகிறேன் - கம்பீர்


அந்த வீரரை கொல்கத்தா அணியிலிருந்து தவற விட்டதற்காக வருந்துகிறேன் - கம்பீர்
x

image courtesy: PTI

தினத்தந்தி 13 May 2024 6:58 PM GMT (Updated: 13 May 2024 7:00 PM GMT)

சூர்யகுமார் யாதவை கொல்கத்தா அணியிலிருந்து தவற விட்டதற்கு வருந்துவதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்

கொல்கத்தா,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். சீசனில் 2 முறை சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 19 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இந்த வருடம் அந்த அணியின் எழுச்சிக்கு கவுதம் கம்பீர் முக்கிய காரணமாக திகழ்கிறார்.

ஏனெனில் 2012, 2014 ஆகிய வருடங்களில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த அவர் தற்போது ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவருடைய வழிகாட்டுதலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அதிரடியான முடிவுகளை எடுத்து கொல்கத்தா வெற்றி நடை போட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக 2014 காலகட்டத்தில் ஓப்பனிங்கில் அசத்திய சுனில் நரைனை இந்த வருடம் மீண்டும் கெளதம் கம்பீர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்கியுள்ளார்.

இந்நிலையில் 2012-ல் தம்முடைய தலைமையில் முதல் முறையாக ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான சூர்யகுமார் யாதவை நாளடைவில் கொல்கத்தா அணி தவற விட்டதற்காக வருந்துவதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"சரியான திறமையை கண்டறிந்து உலகிற்கு காண்பிப்பதே தலைவரின் வேலையாகும். எனது 7 வருட கொல்கத்தா கேப்டன்ஷிப் பதவியில் ஒரு வருத்தம் என்னவெனில் சூர்யகுமார் யாதவை அவரது திறமைக்கேற்றவாறு நாங்கள் பயன்படுத்த முடியவில்லை. அதற்கு மற்ற பேட்ஸ்மேன்களின் சேர்க்கை காரணமாக இருந்தது. நீங்கள் 3-வது இடத்தில் ஒரு வீரரை மட்டுமே விளையாட வைக்க முடியும். மேலும் ஒரு கேப்டனாக நீங்கள் அணியில் உள்ள மற்ற 11 வீரர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர் 3வது இடத்தில் திறம்பட செயல்பட்டிருப்பார்.

அவர் அணியின் வீரர். யார் வேண்டுமானாலும் சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் அணியின் வீரராக இருப்பது மிகவும் கடினமாகும். 6 அல்லது 7வது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தாலும் சரி பெஞ்சில் அமர வைத்தாலும் சரி அவர் எப்போதும் அணிக்காக சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக் கொள்வார். அதனாலேயே அவரை நாங்கள் துணை கேப்டனாகவும் அறிவித்தோம்" என்று கூறினார்.


Next Story