அமைதியாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்


அமைதியாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்
x

Image Coutest: AFP 

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது வென்றார்.

பல்லகெலே,

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இலங்கை அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்களே அடித்தது.

இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டியில் கூறியதாவது, (சூப்பர் ஓவரில் பந்துவீசியது குறித்து) இதற்கு நான் செய்த உழைப்பும், கடவுளின் ஆசிர்வாதமும் உதவி செய்தது. அமைதியாக இருந்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். அது போன்ற சூழ்நிலையில் என்னிடம் பந்தை கொடுத்த சூர்யகுமாருக்கு மிகவும் நன்றி.

இப்போட்டியில் இந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது. நான் செய்ய வேண்டிய வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன். இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நாங்கள் சில திட்டங்களை தீட்டினோம். பிட்ச்சில் கொஞ்சம் உதவி இருந்தது. அதில் நான் சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசினேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story