எனக்காக வேண்டாம்...நாட்டுக்காக செய்வதையே விரும்புகிறேன் - சமூக வலைதள பதிவுகள் குறித்து டிராவிட்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைய உள்ளது.
பார்படாஸ்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் ஆன இந்தியா, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
முன்னதாக இத்தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதனால் ட்ராவிட்டுக்காக இந்த உலகக் கோப்பையை வெல்லுங்கள் என்று சேவாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் சமூக வலைதளங்களிலும் #DoItForDravid என்ற ஹேஷ்டேக் வைரலானது.
இந்நிலையில் இந்த சமூக வலைதள பதிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிராவிட், தமக்காக கோப்பையை வெல்வதை விட நாட்டுக்காக இந்திய அணியினர் சாம்பியன் பட்டம் வெல்வதையே தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரே வருடத்துக்குள் டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் மற்றும் டி20 என்ற 3 விதமான ஐசிசி தொடரின் பைனலுக்கு தொடர்ச்சியாக இந்தியா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "எனது மதிப்புகளுக்கு இது முற்றிலும் எதிரானது. யாராவது டிராவிட்டுக்காக இதை செய்யுங்கள் என்று சொன்னால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. யாரோ ஒருவரிடம் நீங்கள் ஏன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புகிறீர்கள்? என்று கேட்டால் எவரெஸ்ட் சிகரம் அங்கே இருப்பதாலேயே நான் ஏற விரும்புகிறேன் என்று சொல்வார். அந்த வகையில் நாம் ஏன் இந்த உலகக்கோப்பையை வெல்ல விரும்புகிறோம்?
அது இருப்பதாலேயே நாம் வெல்ல விரும்புகிறோம். எனவே இது யாருக்காகவும் கிடையாது. அங்கே வெற்றி இருக்கிறது. அதைப் பெறுவதற்கு நாம் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். எனவே ஒருவருக்காக இதை செய்யுங்கள் என்று சொல்வதற்கு நான் எதிரானவன். அதை நம்பவும் இல்லை விவாதிக்கவும் இல்லை. எனவே அந்தப் பிரச்சாரத்தை நீக்கி விட்டால் அதை பாராட்டுவேன். ஒரே வருடத்தில் நாங்கள் 3 வகையான பைனலுக்கும் தகுதி பெற்றுள்ளோம். அதற்கான பாராட்டுகள் வீரர்களை சேரும். இம்முறை நாங்கள் சிறப்பாக விளையாடினால் கண்டிப்பாக வெல்வோம்" என்று கூறினார்.