'உம்ரான் விஷயத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை' - கேப்டன் மார்க்ரம்


உம்ரான் விஷயத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை - கேப்டன் மார்க்ரம்
x

Image Courtesy : Twitter @IPL

உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கே தெரியவில்லை என ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் கிளாசெனின் அதிரடி சதத்தால் 186 ரன்கள் குவித்தது. இதையடுத்து இலக்கை விரட்டிய பெங்களூரு அணி விராட் கோலியின் அசத்தல் சதம் மற்றும் டு பிளெஸ்சிஸ்-யின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் உம்ரான் மாலிக்குக்கு இடம் அளிக்கவில்லை. உம்ரான் கடந்த சில ஆட்டங்களாகவே அணியில் இடம் கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உம்ரான் மாலிக் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கே தெரியவில்லை என ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

"உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என்ன நடக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் தனித்திறன் கொண்ட வீரர் உம்ரான். இருந்தும் அவரது விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை" என மார்க்ரம் தெரிவித்தார். அவரது இந்த பதில் சர்ச்சையை எழுப்பி உள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணிக்காக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் உம்ரான். அதிவேக பந்து வீச்சுக்காக பரவலாக அறியப்படுபவர். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் 7 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி உள்ளார். அதன் மூலம் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார். இந்திய அணியிலும் விளையாடி வருகிறார்.

இதற்கு முன்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட வார்னர், 2021 சீசனின் போதே கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு அந்த சீசனில் ஆடும் லெவனிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Next Story