'பவர்-பிளே'யில் 125 ரன் விளாசி ஐதராபாத் அணி சாதனை
குறைந்த ஓவர்களில் 100 ரன்களை எட்டிய அணி என்ற பெருமையையும் ஐதராபாத் அணி பெற்றது.
புதுடெல்லி,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது. விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்த டேவிட் வார்னர் டெல்லி அணிக்கு திரும்பினார்.
'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அவர்கள் முதல் ஓவரில் இருந்தே ரன்வேட்டையை காண்பித்தனர். கலீல் அகமது வீசிய தொடக்க ஓவரிலேயே 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினர். அதில் இருந்து இடைவிடாது ரன் மழை தான். பவர்-பிளே வரை எந்த பந்து வீச்சாளரையும் விட்டு வைக்கவில்லை.
3-வது ஓவருக்குள் அரைசதத்தை கடந்த டிராவிஸ் ஹெட் இதற்கு 16 பந்துகளே எடுத்துக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக லலித்யாதவ், குல்தீப், முகேஷ்குமார் பந்துவீச்சையும் நைய புடைத்து எடுத்தனர். 5-வது ஓவரில் அணி 100-ஐ தொட்டது. 'பவர்-பிளே'யான முதல் 6 ஓவர்களில் மட்டும் 125 ரன்கள் திரட்டினர். ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் 'பவர்-பிளே'யில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது தான்.
அணியின் ஸ்கோர் 131-ஆக (6.2 ஓவர்) உயர்ந்த போது அபிஷேக் ஷர்மா (46 ரன், 12 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) குல்தீப் யாதவின் சுழலில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் (1 ரன்) அதே ஓவரில் ஆட்டமிழந்தார். குல்தீப்பின் அடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட் 89 ரன்களில் (32 பந்து, 11 பவுண்டரி, 6 சிக்சர்) சிக்கினார். ஹெட் வெளியேறிய போது ஐதராபாத் அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது. எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென் (15 ரன்) நிலைக்கவில்லை.
முதல் 10 ஓவருக்குள் டாப்-4 பேட்ஸ்மேன்கள் வெளியேறி விட்டதால், பின்னர் வந்த வீரர்கள் சற்றே நிதானத்தை கடைபிடிக்க வேண்டியதாகி விட்டது. ஆனாலும் நிதிஷ்குமார் ரெட்டி (37 ரன்), ஷபாஸ் அகமது (59 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆகியோர் ஸ்கோர் 250-ஐ கடக்க வித்திட்டனர். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் அந்த அணி 3-வது முறையாக 250 ரன்னுக்கு மேல் எடுத்து மலைக்க வைத்துள்ளது. டெல்லி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 267 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி வீரர்களும் வாணவேடிக்கைக்கு குறைவைக்கவில்லை. இம்பேக்ட் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா (16 ரன்), டேவிட் வார்னர் (1 ரன்) ஏமாற்றம் அளித்தாலும், ஜேக் பிராசர் மெக்குர்க் 15 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் அந்த அணி 6.4 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ தொட்டது. பிராசர் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 65 ரன் (18 பந்து) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் டெல்லியின் உத்வேகம் குறைந்தது. பின் வரிசையில் அபிஷேக் போரெல் 42 ரன்), கேப்டன் ரிஷப் பண்ட் (44 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.
டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 4 விக்கெட்டும், மயங்க் மார்காண்டே, நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். 7-வது லீக்கில் ஆடிய ஐதராபாத்துக்கு இது 5-வது வெற்றியாகும். 10 புள்ளிகளுடன் அந்த அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லிக்கு 5-வது தோல்வியாகும்.
ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் மட்டும் 125 ரன்களை நொறுக்கினர். 17 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் பவர்-பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக கொல்கத்தா 105 ரன்கள் எடுத்ததே பவர்-பிளேயில் அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் ஐதராபாத் அணி நேற்றைய ஆட்டத்தில் 5-வது ஓவரிலேயே ஸ்கோர் 100-ஐ தாண்டியது. குறைந்த ஓவர்களில் 100 ரன்களை எட்டிய அணி என்ற பெருமையையும் ஐதராபாத் அணி பெற்றது.