அவரால்தான் நான் இங்கு இருக்கிறேன் - வீரர்களின் ஓய்வறையில் கடைசியாக உரையாற்றிய டிராவிட்
கடந்த ஒருநாள் உலகக்கோப்பையுடன் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து தாம் விடை பெறலாம் என்று நினைத்ததாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
பார்படாஸ்,
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பணியை இவர் செய்து வந்துள்ளார். டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை நீடித்து வந்தது. அந்த குறையையும் தற்போது நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமாக பயிற்சியாளராக தனது பயணத்தை முடித்து இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையுடன் தாம் விடை பெறலாம் என்று நினைத்ததாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ஆனால் அப்போது ரோகித் சர்மாதான் தம்மை 2024 வரை பயிற்சியாளராக செயல்பட சம்மதிக்க வைத்ததாக தெரிவிக்கும் அவர் சாதனைகளை விட உலகக்கோப்பை வெற்றி தான் எப்போதும் பேசப்படும் என்று கூறியுள்ளார். எனவே அதற்காக அனைவரும் விளையாடுமாறு கூறும் அவர் விடை பெறுவதற்கு முன்பாக இந்திய வீரர்களின் ஓய்வறையில் கடைசியாக உரையாற்றியது பின்வருமாறு:-
"வாழ்நாளில் மறக்க முடியாத நினைவில் என்னையும் ஒரு பங்காய் மாற்றியதற்கு நன்றி. பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆனால் இந்த அற்புதமான நினைவில் அங்கமாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்களுடைய கெரியரில் எடுக்கும் ரன்கள், விக்கெட்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் இது போன்ற நினைவுகளைதான் வைத்திருப்பீர்கள். நீங்கள் போராடி கம்பேக் கொடுத்த விதம் அற்புதமானது. ஒரு அணியாக நாம் செயல்பட்டது அற்புதமானது. சமீப காலங்களாக வெற்றியை நெருங்கியும் தொட முடியாததால் ஏமாற்றங்கள் இருந்தன. ஆனால் தற்போது நம் வீரர்களும் பயிற்சியாளர்களும் செய்த சாதனைக்காக மொத்த நாடும் பெருமைப்படுகிறது.
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஏனென்றால் அவர்தான் நவம்பர் மாதம் என்னை தொடர்பு கொண்டு பயிற்சியாளராக டி20 உலக கோப்பை வரை இருங்கள் என்று என்னை வற்புறுத்தினார். அவரால்தான் நான் இங்கு இருக்கின்றேன். எனவே ரோகித் சர்மா மற்றும் உங்கள் அனைவருடன் வேலை செய்ததை கவுரவமாக நினைக்கிறேன். உங்களுடைய நேரத்திற்கு நன்றி. ஒரு கேப்டன் பயிற்சியாளராக நாம் நிறைய பேசியுள்ளோம் என்பது எனக்கு தெரியும். அதில் மாறுபட்ட கருத்துகள் இருந்திருக்கலாம். இருப்பினும் ஒவ்வொருவரையும் அறிந்திருப்பது புத்திசாலித்தனமானது" என்று கூறினார்.