'அவர் ஒன் மேன் ஆர்மி' - இந்திய வீரருக்கு நடுவர் புகழாரம்


அவர் ஒன் மேன் ஆர்மி - இந்திய வீரருக்கு நடுவர் புகழாரம்
x

ரோகித் சர்மா கிரிக்கெட்டைப் பற்றிய தெளிவான அறிவை கொண்டவர் என்று அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

விராட் கோலிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் அவர், ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் ஓப்பனிங்கில் களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா சமீப காலங்களில் சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் அடித்து விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை கடைபிடிக்கிறார். அந்த ஸ்டைலில் விளையாடிய அவர் 2024 டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் ரோகித் சர்மா பார்ப்பதற்கு சாதாரணமானவராக தெரிந்தாலும் கிரிக்கெட்டைப் பற்றிய தெளிவான அறிவை கொண்டவர் என்று இந்தியாவின் பிரபல நடுவர் அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும் 160 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை ரோகித் சர்மா 120 கி.மீ வேகத்தில் வருவதைப்போல எளிதாக அடிப்பார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் பார்ப்பதற்கு சாதாரணமானவராக தெரிவார். ஆனால் சாதுரியமான வீரரான அவர் விளையாட்டைப் பற்றிய நல்ல அறிவைக் கொண்டவர். அவருடைய கூர்மையான அறிவை அவரின் பேட்டிங்கை வைத்து நீங்கள் கணிக்க முடியாது. அவர் எதிர்கொள்ளும் பந்துகள் 120 கிலோமீட்டர் போல தெரியும். ஆனால் அதே பந்துகளை மற்றவர்கள் எதிர்கொள்ளும்போது 160 கிலோமீட்டர் போல தெரியும். நடுவர்களிடம் அவர் நிறைய முறையீடு செய்வார். பின்னர் அப்படியே இருக்கட்டும் என்று சொல்வார். ரோகித் சர்மா போன்ற வீரருக்கு எதிராக அம்பயரிங் செய்வது எளிது.

ஏனெனில் குழப்பமற்ற முறையில் பேட்டிங் செய்யும் அவரிடம் நீங்கள் அவுட் அல்லது நாட் அவுட் என்று நேராக சொல்ல முடியும். சிறந்த புட்ஒர்க்கை கொண்ட அவர் முன்னோக்கி அவசரப்பட்டு வராமல் பின்னோக்கி நின்று பந்துக்காக காத்திருப்பார். கிரிக்கெட்டில் பந்தை பற்றிய அறிவு என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அவரிடம் அது நிறையவே உள்ளது. அவருக்கு பந்தை நோக்கி எப்போதும் முன்னே நகர வேண்டும் என்பது தெரியும். அவருடைய புல் ஷாட்டை பாருங்கள் அது நம்ப முடியாதது. கொல்கத்தாவில் அவர் 200+ ரன்கள் அடித்த போட்டியில் நான் டிவி அம்பயராக இருந்தேன். ரோகித் வித்தியாசமான கிளாஸ் நிறைந்தவர். அவர் சோம்பேறித்தனமாக தெரிந்தாலும் வித்தியாசமான ஐடியா கொண்டவர். தன்னுடைய நாளில் அவர் ஒன் மேன் ஆர்மி. அவருடைய கேப்டன்சியும் நன்றாக உள்ளது" என்று கூறினார்.


Next Story