நெஞ்சம் உடைந்த தருணம் - 2019 உலகக்கோப்பை தோல்வி குறித்து எம்.எஸ். தோனி உருக்கம்
2019 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.
மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.
ஆனால் அவருடைய சர்வதேச கெரியர் அந்த அளவுக்கு சிறப்பானதாக முடிவடையவில்லை. ஏனெனில் 2019-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. அந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். எனவே அவரின் கெரியர் வெற்றியுடன் நிறைவடையாதது கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 2019 உலகக்கோப்பை தோல்வி தம்முடைய நெஞ்சத்தை உடைத்த தருணம் என்று தோனி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு:-
"அது மிகவும் கடினமானது. ஏனெனில் அதுவே என்னுடைய கடைசி உலகக்கோப்பை என்பது எனக்குத் தெரியும். அதில் வெற்றி பெறுவது நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது நெஞ்சம் உடைந்த தருணம். எனவே தோல்வியை ஒப்புக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர முயற்சித்தோம். அதிலிருந்து மீள்வதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. அதன் பின் நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. ஆம் அது என்னுடைய மனமுடைந்த தருணம். ஆனால் அதிலிருந்து நகர வேண்டும். நீங்கள் சிறந்ததை முயற்சித்தீர்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதை ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.