சுயநலமே இல்லாமல் விளையாடும் அவர் கண்டிப்பாக ஒருநாள்... - இளம் வீரருக்கு ராயுடு பாராட்டு


சுயநலமே இல்லாமல் விளையாடும் அவர் கண்டிப்பாக ஒருநாள்... - இளம் வீரருக்கு ராயுடு பாராட்டு
x

அபிஷேக் ஷர்மா சுயநலமின்றி விளையாடுவதாக அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார்.

ஐதராபாத்,

இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் பல இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை உலகுக்கு காண்பித்து வருகின்றனர். அதில் ஐதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா குறிப்பிடத்தக்கவர்.

டிராவிஸ் ஹெட்டுடன் கை கோர்த்து அதிரடியாக விளையாடி வரும் அவர், ஐதராபாத் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். இதுவரை 13 போட்டிகளில் 467 ரன்கள் குவித்து எதிரணிகளை பந்தாடி வருகிறார். அத்துடன் நடப்பு சீசனில் 41 சிக்சர்கள் அடித்துள்ள அவர் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்துள்ளார்.

இந்நிலையில் அபிஷேக் ஷர்மா சுயநலமின்றி விளையாடுவதாக அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார். எனவே சுயநலமே இல்லாலம் இல்லாமல் விளையாடும் அவர் கண்டிப்பாக ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று தெரிவிக்கும் ராயுடு இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"ஐதராபாத் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரிடம் நான் பேசினேன். அப்போது ஏன் நீங்கள் பெரிய ஸ்கோர் அடிப்பதைப் பற்றி நினைப்பதில்லை? என்று கேட்டேன். அதற்கு நான் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி அல்லது சிக்சராக அடிக்க முயற்சிப்பதாக அவர் என்னிடம் சொன்னார். அந்த வகையில் அவர் அணிக்காக மிகவும் சுயநலமின்றி விளையாடுவதாக நான் உணர்ந்தேன்.

பொதுவாக நீங்கள் நல்ல பார்மில் இருக்கும்போது இப்படி அடுத்தடுத்த பந்துகளை எளிதாக அடித்து 100 ரன்கள் அடிப்பதற்கான இன்னிங்சை கட்டமைக்க முடியும். ஆனால் அதைச் செய்யாமல் அணிக்காக விளையாடும் அவரைப் போன்ற வீரரை நீங்கள் பாராட்ட வேண்டும். இப்படி சுயநலத்தைப் பற்றி சிந்திக்காத வீரர்கள் இந்திய அணிக்கு கிடைப்பது அரிதானதாகும். எனவே வருங்காலத்தில் இந்திய அணியில் அவர் இல்லாமல் இருப்பதை நான் பார்க்கப் போவதில்லை. நீல ஜெர்சியை அணிந்த பின்பும் அவர் இந்தியாவுக்காக இதே மனநிலையுடன் விளையாடுவார் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.


Next Story