டி20 உலகக்கோப்பை அணியில் அவர் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் - இளம் வீரருக்கு ஆதரவு அளித்த சஞ்சய் மஞ்ரேக்கர்


டி20 உலகக்கோப்பை அணியில் அவர் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் - இளம் வீரருக்கு ஆதரவு அளித்த சஞ்சய் மஞ்ரேக்கர்
x

Image Courtesy: AFP 

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆடி வருகின்றன.

இந்த ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் வரும் ஜூன் 1ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. 20 அணிகள் கலந்து கொள்ளும் அந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற இந்திய வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் உள்ள இளம் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. குறிப்பாக சி.எஸ்.கே அணியில் மிடில் ஆர்டரில் சிக்சர்களை பறக்க விட்டு அபாரமாக விளையாடி வரும் ஷிவம் துபே உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்கள் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டுள்ளனர்.

இருப்பினும் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. பெரியளவில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங் 6 போட்டியில் 83 ரன்களை 162.75 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

இந்நிலையில் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்பதற்காக ரிங்கு சிங்கை உலகக் கோப்பையில் தேர்வு செய்ய மறந்து விடக்கூடாது என சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்வுக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அவருக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே ரிங்கு சிங்கை தேர்வுக் குழுவினர் மறந்து விட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் நேரடியாக இந்திய அணிக்குள் வருவதற்கு தகுதியானவர். ஏனெனில் தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர் எந்தளவுக்கு தொடர்ந்து நன்றாக விளையாடினார் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

இந்திய அணியில் எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அவர் முக்கிய வீரராக இருப்பதை நான் விரும்புகிறேன். அதே போல நீண்ட காலமாக தடுமாறிய சஞ்சு சாம்சன் ஒரு வழியாக நம்முடைய எதிர்பார்ப்புக்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளார். நல்ல முதிர்ச்சியுடன் தொடர்ந்து அசத்தும் அவரைப் போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர் இந்திய டி20 அணிக்கு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story