இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் ஹர்திக் பாண்ட்யா - காரணம் என்ன?


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் ஹர்திக் பாண்ட்யா - காரணம் என்ன?
x

Image Courtesy: AFP 

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

புதுடெல்லி,

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித், விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர்களது இடத்தை யார் நிரப்புவார்கள்? என ரசிகர்களிடையே கேள்வி எழும்பி உள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி ஹர்த்திக் பாண்ட்யா தலைமையில் அறிவிக்கப்பட உள்ளதாகவும், அதே வேளையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து பாண்ட்யா விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் தொடருக்கான அணியில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என பாண்ட்யா பி.சி.சி.ஐ-யிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹர்திக் பாண்ட்யா திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நிலவி வருவதாகவும் அதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் முகேஷ் அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியிலும் ஹர்திக் பாண்ட்யா தனியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை ஹர்திக் பாண்ட்யா தவறவிடும் பட்சத்தில் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளது.

இந்தியா - இலங்கை டி20 தொடர் விவரம்:

முதல் டி20 போட்டி: ஜூலை 27 - பல்லேகலே

2வது டி20 போட்டி: ஜூலை 28 - பல்லேகலே

3வது டி20 போட்டி: ஜூலை 30 - பல்லேகலே

இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர் விவரம்:

முதல் ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 02 - கொழும்பு

2வது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 04 - கொழும்பு

3வது ஒருநாள் போட்டி: ஆகஸ்ட் 07 - கொழும்பு


Next Story