'மும்பை அணிக்கு திரும்ப வேண்டுமானால்...' - ஹர்திக் பாண்ட்யா விதித்த நிபந்தனை; வெளியான தகவல்


மும்பை அணிக்கு திரும்ப வேண்டுமானால்... - ஹர்திக் பாண்ட்யா விதித்த நிபந்தனை; வெளியான தகவல்
x

Image Courtesy: ANI

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார்.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்தவர் ரோகித் சர்மா. இவர் தலைமையிலான மும்பை அணி 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

இதனிடையே, மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார். கடந்த 2 தொடர்களில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா அந்த அணிக்காக ஒரு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். அதேபோல், மற்றொரு முறை அணியை இறுதிப்போட்டி வரை வழிநடத்தி சென்றுள்ளார்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணியிடமிருந்து அதிக தொகைக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் வசம் சென்றார்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு திரும்பவேண்டுமானால் கேப்டன் பதவி தரவேண்டுமென ஹர்திக் பாண்ட்யா நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், குஜராத் அணியின் கேப்டனாக செயல்படுவதால் மும்பை அணிக்கு திரும்பவேண்டுமானால் கேப்டன் பதவியை தனக்கு கொடுக்குமாறு ஹர்திக் பாண்ட்யா மும்பை அணி நிர்வாகத்திடம் நிபந்தனை விதித்துள்ளார். இதையடுத்து, கேப்டனை மாற்றுவது குறித்து கடந்த உலகக்கோப்பை தொடரின்போது மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவிடம் தெரிவித்துள்ளது. மும்பை அணி நிர்வாகம் எடுத்த முடிவை ரோகித் சர்மா ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், அவர் 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை அணிக்காக விளையாடவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story