பாதி பேருக்கு ஆங்கிலம் கூட புரியாது மேலும்... - ஆர்.சி.பி தோல்விக்கான காரணங்களை விளக்கிய சேவாக்


பாதி பேருக்கு ஆங்கிலம் கூட புரியாது மேலும்... - ஆர்.சி.பி தோல்விக்கான காரணங்களை விளக்கிய சேவாக்
x

Image Courtesy : PTI

டு பிளெஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

டு பிளெஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 25 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.

7 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள பெங்களூரு அணி எஞ்சிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும். இந்நிலையில், பெங்களூரு அணியில் அனைவருமே வெளிநாட்டு பயிற்சியாளராக இருப்பதே தோல்விக்கு காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

12 - 15 வீரர்கள் இந்தியர்களாகவும், 10 வீரர்கள் வெளிநாட்டவர்களாகவும் இருந்து மொத்த பயிற்சியாளர் குழுவும் வெளிநாட்டவர்களாக இருந்தால் அது பிரச்சனை. அங்கே சிலர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள். மற்றவர்கள் இந்திய வீரர்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆங்கிலமே புரியாது.

அப்படிபட்ட சூழ்நிலையில் எப்படி அவர்களை உங்களால் உத்வேகப்படுத்த முடியும்?. எப்படி அவர்களிடம் உங்களால் நேரத்தை செலவிட முடியும்?. யார் அவர்களிடம் பேசுவார்கள்?. பெங்களூரு அணியில் ஒரு இந்திய பயிற்சியாளரை கூட பார்க்க முடியவில்லை. அங்கே குறைந்தபட்சம் வீரர்கள் நம்பக்கூடிய ஒருவர் இருக்க வேண்டும்.

வீரர்கள் எப்போதும் சவுகரியமான நிலையில் இருக்க வேண்டும். தற்போது அது பெங்களூரு அணியில் இல்லை. ஒருவேளை கேப்டன் எதையும் கேட்டால் அந்த வீரர்கள் ஆங்கிலத்தில் பதில் கொடுக்க வேண்டும். ஒருவேளை இந்தியர் கேப்டனாக இருந்தால் அந்த வீரர்கள் தங்களுடைய மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வார்கள்.

ஆனால் அதை ஒரு வெளிநாட்டு கேப்டனிடம் சொல்லும் போது சரியான புரிதல் இல்லாமல் அடுத்த போட்டியில் நீங்கள் பிளேயிங் லெவனில் நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஆர்.சி.பி அணியில் குறைந்தது 2 - 3 இந்தியர்கள் துணை பயிற்சியாளர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story