கேமரூன் கிரீன் அபார சதம்.. நியூசிலாந்துக்கு எதிராக முதல் நாளில் ஆஸ்திரேலியா 279 ரன்கள் சேர்ப்பு
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
வெலிங்டன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சுமித் மற்றும் உஸ்மான் கவாஜா ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். சுமித் 31 ரன்களிலும், கவாஜா 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேமரூன் கிரீன் தவிர மற்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றம் அளித்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுசாக்னே மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் நிலைத்து விளையாடிய மிட்செல் மார்ஷ் 40 ரன்களிலும், அலேக்ஸ் கேரி 10 ரன்களிலும், ஸ்டார்க் 9 ரன்களிலும், கம்மின்ஸ் 16 ரன்களிலும், லயன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தனி ஆளாக போராடிய கிரீன் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் நாளில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் சேர்த்துள்ளது. அபாரமாக விளையாடி சதமடித்த கிரீன் 103 ரன்களிலும், ஹேசில்வுட் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஒ ரூர்க் மற்றும் ஸ்காட் குகெலீஜ்ன் தலா 2 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.