பாண்ட்யா தலைமை குறித்த ஏபி டி வில்லியர்ஸ் விமர்சனத்திற்கு கம்பீர் பதிலடி


பாண்ட்யா தலைமை குறித்த ஏபி டி வில்லியர்ஸ் விமர்சனத்திற்கு கம்பீர் பதிலடி
x

எம்.எஸ். தோனி போல் அமைதியாக செயல்பட வேண்டுமென்ற ஈகோவுடன் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் செய்ததாக டி வில்லியர்ஸ் விமர்சித்திருந்தார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார்.

ஐ.பி.எல். தொடரில் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறிய மும்பை அணி 2013 - 2020 வரையிலான காலகட்டங்களில் ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்றது. அதனால் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மா இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை தலைமை தாங்கி வருகிறார்.

இருப்பினும் குஜராத் அணிக்கு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த காரணத்தால் நடப்பு சீசனுக்கு முன்னதாக பாண்ட்யாவை வாங்கிய மும்பை அணி நிர்வாகம் தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது. ஆனால் அவருடைய தலைமையில் ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்ட மும்பை முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த தோல்விக்கு பேட்டிங், பவுலிங் ஆகியவற்றைத் தாண்டி சுமாராக கேப்டன்ஷிப் செய்த ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணமாக அமைந்ததாக இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

அந்த வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, எம்.எஸ். தோனி போல் அமைதியாக செயல்பட வேண்டுமென்ற ஈகோவுடன் கேப்டன்ஷிப் செய்ததாக ஏபி டி வில்லியர்ஸ் விமர்சித்திருந்தார். அத்துடன் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் இளம் வீரர்களைக் கொண்ட குஜராத் அணிக்கு வேண்டுமானால் செட்டாகலாம் ஆனால் ரோகித், பும்ரா போன்ற சீனியர்களைக் கொண்ட மும்பை அணியில் எடுபடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் பற்றி பேசுவதற்கு ஏபி டி வில்லியர்சுக்கு எந்த தகுதியும் இல்லை என்ற வகையில் கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில் சொந்த சாதனைகளை தவிர்த்து பெங்களூரு அணிக்காக அவர் எதையும் சாதிக்கவில்லை என்று தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"கேப்டனாக இருந்தபோது அவருடைய சொந்த செயல்பாடுகள் என்ன? கெவின் பீட்டர்சன் அல்லது ஏபி டி வில்லியர்ஸ் போன்றவர்கள் கேப்டனாக தங்களுடைய கெரியரில் எந்த செயல்பாடுகளையும் வெளிப்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. தலைமை பற்றி அவர்களுடைய புள்ளி விவரங்களை நீங்கள் எடுத்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. தன்னுடைய சொந்த சாதனைகளை தவிர்த்து ஏபி டி வில்லியர்ஸ் ஐ.பி.எல். தொடரில் எதையும் சாதித்ததாக எனக்குத் தெரியவில்லை.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்கள். ஒவ்வொரு போட்டி முடிந்ததும் ஒவ்வொரு நாள் முடிந்ததும் அவருடைய செயல்பாடுகளைப் பற்றி மதிப்பிடுவது சரியல்ல. எனவே அவருடைய (பாண்ட்யா) தலைமை பற்றி பேசும் வல்லுனர்கள் முதலில் தாங்கள் கேப்டனாக செயல்பட்டபோது என்ன செயல்பாடுகளை வெளிப்படுத்தினோம் என்பதை பார்க்க வேண்டும். இன்று மும்பை இந்தியன்ஸ் நன்றாக செயல்படாததால் இப்படி அனைவரும் பேசுகின்றனர்" என்று கூறினார்.


Next Story