புதிய தலைமுறையினருக்கு வழிவிடுகிறேன்..! கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அலஸ்டர் குக்
சமீபத்தில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போட்டித் தொடருடன் அலஸ்டர் குக்கின் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக். இவர் முதல் தர போட்டி, ஏ பிரிவு போட்டி மற்றும் அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 2006ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், 2007ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான இவர், மொத்தம் 161 போட்டிகளில் விளையாடி 33 சதம் உள்பட 12,472 ரன்கள் குவித்துள்ளார். 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,204 ரன்கள் சேர்த்துள்ளார். 59 டெஸ்ட் போட்டிகளுக்கும், 69 ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக பணியாற்றி உள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், உள்நாட்டு போட்டித் தொடர்களில் எஸ்செக்ஸ் கவுண்டி கிளப் அணிக்காக விளையாடி வந்தார். 2019ம் ஆண்டு கவுண்டி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று கொடுத்தார்.
இந்நிலையில், அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அலஸ்டர் குக் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போட்டித் தொடரின் முடிவில் அவரது ஒப்பந்தம் காலாவதியானது. இதையடுத்து அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து எஸ்செக்ஸ் இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவது எளிதானதல்ல. 20 வருடங்களுக்கும் மேலாக, பல்வேறு போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். நான் கனவிலும் நினைத்து பார்க்காத இடங்களுக்கு செல்லவும், சாதனை படைத்த அணிகளின் ஒரு பகுதியாக இருக்கவும், குறிப்பாக வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நட்புகளை உருவாக்கவும் கிரிக்கெட் எனக்கு பாலமாக இருந்தது.
என் கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த பகுதியை நிறைவு செய்ய இதுவே சரியான நேரம். நான் சிறந்த வீரராக திகழ்வதற்கு, என்னால் முடிந்த அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி உள்ளேன். இப்போது புதிய தலைமுறையினருக்கு வழிவிட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.