தோனியை பின்பற்றுங்கள்...பாண்ட்யாவுக்கு அறிவுரை வழங்கிய இந்திய முன்னாள் வீரர்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
மும்பை,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.
பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதையடுத்து பாண்டியாவின் தலைமையை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். மேலும் மும்பை அணி ஆடிய அனைத்து மைதாங்களிலும் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தங்களுடைய கேப்டனாக இல்லாததை ஜீரணிக்க முடியாமலேயே மும்பை ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும், டெவோன் கான்வேவுக்கு பதிலாக ரச்சின் ரவீந்திராவை கண்டறிந்த தோனி மற்றும் சென்னை அணியை பாண்ட்யா பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய கேப்டனாக இருக்கும் தங்களுடைய ஹீரோ மும்பை அணியின் கேப்டனாக இல்லாததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. ரோகித் என்ன தவறு செய்தார்..?. கடைசி 2 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றிருந்தால் அனைவரும் அமைதியாக இருந்திருப்பார்கள்.
என்னை பொறுத்த வரை பாண்ட்யா அணியின் கலவையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஐதராபாத்துக்கு எதிராக 277 ரன்கள் கொடுத்ததால் உங்களுடைய பவுலிங் இல்லை என்று அனைவரும் கூறுகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு எதிராக ஒரு அணி எப்படி 277 ரன்கள் அடித்தது..?. குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் மும்பை நெருக்கமாக சென்று வெற்றியை விட்டது.
இந்த நேரத்தில் தோனி என்ன செய்கிறார் என்பதை பாருங்கள். கடந்த வருடம் அதிக ரன்கள் அடித்த டெவோன் கான்வே இம்முறை காயத்தை சந்தித்துள்ளார். அந்த இடத்தில் கிட்டத்தட்ட அதே போன்ற ரச்சின் ரவீந்தராவை அவர் கொண்டு வந்துள்ளார். பாண்ட்யாவும் அது போன்ற வீரர்களை கண்டறிய வேண்டும் அல்லது உங்களுடைய பலவீனங்கள் வெளிப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.