முதல் ஒருநாள் போட்டி; டெக்டர் சதம் வீண் - அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் இப்ராகிம் ஜட்ரான் 60 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அஸ்மத்துல்லா ஓமர்சாய் 19 ரன், நபி 40 ரன், ரஹ்மத் ஷா 2 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து ஹஸ்மத்துல்லா ஷாகிடி களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் சதம் அடித்து அசத்தினார். அவர் 121 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து குல்பதீன் நைப் களம் இறங்கினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. அயர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பால்பிர்னி 4 ரன், ஸ்டிர்லிங் 5 ரன், அடுத்து களம் இறங்கிய கர்டிஸ் கேம்பர் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து ஹாரி டெக்டர், லோர்சான் டக்கர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் டக்கர் 85 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெக்டர் சதம் அடித்த நிலையில் 138 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் அயர்லாந்து அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டெக்டர் சதம் வீணானது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 35 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.