துலீப் கோப்பை: சஞ்சு சாம்சன் அதிரடி சதம்.. இந்தியா டி அணி 349 ரன்கள் குவிப்பு
இந்தியா டி தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 106 ரன்கள் குவித்தார்.
அனந்தபூர்,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் 3-வது ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நேற்று தொடங்கியது. இதில் ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்தியா 'டி' அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா 'பி' அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா டி அணிக்கு தேவ்தத் படிக்கல் (50 ரன்), கே.எஸ். பரத் (52 ரன்), ரிக்கி புய் (56 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டக்-அவுட் ஆனார். நேற்றைய முடிவில் டி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன்கள் அடித்திருந்தது. சஞ்சு சாம்சன் 89 ரன்களுடனும், சரண்ஷ் ஜெயின் 26 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய டி அணி மேற்கொண்டு 43 ரன்களுக்குள் எஞ்சிய விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 101 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பி அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக அபிமன்யூ ஈஸ்வரன் சதம் அடித்தார். இந்தியா டி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.