துலீப் கோப்பை: இஷான் கிஷன் அபார சதம்... முதல் நாளில் 357 ரன்கள் குவித்த கெய்க்வாட் அணி


துலீப் கோப்பை: இஷான் கிஷன் அபார சதம்... முதல் நாளில் 357 ரன்கள் குவித்த கெய்க்வாட் அணி
x

Image courtesy: AFP

துலீப் கோப்பை தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கின.

அனந்தபூர்,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையின் 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. இதில் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியை எதிர்கொண்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா சி அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ கடைசி நேரத்தில் அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். இதில் கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் கை கோர்த்த சாய் சுதர்சன் - ரஜத் படிதார் இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

சுதர்சன் 43 ரன்களிலும், படிதார் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் பாபா இந்திரஜித் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார். அவர் 111 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் முதல் நாளில் இந்தியா சி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்துள்ளது. காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் களத்திற்கு திரும்பிய கெய்க்வாட் 46 ரன்களுடனும், மனவ் சுதர் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா பி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதன் மற்றொரு ஆட்டத்தில் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியுடன் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியா ஏ முதல் நாளில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.


Next Story