தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 90-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணைய முன்னாள் கமிஷனர் டி.டி.சந்திரசேகரன் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். தலைவர் இணை செயலாளர், உதவி செயலாளர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் போட்டி இருந்தது.
இந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்த எஸ்.பிரபு, ஸ்ரீதுர்காம்புடி சிவகேசவ ரெட்டி, காளிதாஸ் வாண்டையார் ஆகியோர் தங்களது மனுக்களை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் பி.அசோக் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார். ஆடம் சேட் துணைத்தலைவராகவும், ஆர்.ஐ. பழனி செயலாளராகவும், கே.சிவகுமார் இணை செயலாளராகவும், டாக்டர் ஆர்.என்.பாபா உதவி செயலாளராகவும், ஸ்ரீனிவாசராஜ் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
உயர்மட்ட கமிட்டி உறுப்பினர்களாக 9 பேர் தேர்வானார்கள். டி.என்.பி.எல். நிர்வாக கவுன்சில் பிரதிநிதிகளாக ஆனந்த், பிரதிஷ் வேதாப்புடி, ஜாபர் ஆசிக் அலி ஆகியோரும், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களாக கிரிஷ், மாதவன், சுதா ஷா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்தீபன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.