ஜெய்ஸ்வாலின் கெரியரை முடித்து விடாதீர்கள் - கவுதம் கம்பீர் அதிரடி பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்தார்.
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தின் ( 209 ரன்கள்) உதவியுடன் 396 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.
இந்நிலையில் சேவாக்போல வருவார், அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதுபோல ஜெய்ஸ்வாலை பாராட்டி அழுத்தத்தை உண்டாக்கி அவரின் கெரியரை முடித்து விடாதீர்கள் என்று கவுதம் கம்பீர் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-
"இந்த சாதனைக்காக அந்த இளம் வீரரை நான் வாழ்த்த விரும்புகிறேன். அதை விட முதலில் அந்த இளம் வீரரை சுதந்திரமாக விளையாட விடுங்கள் என்று நான் அனைவரிடமும் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் குறிப்பாக ஊடகங்கள் அவரைப்போன்ற வீரர்களின் சாதனைகளை மிகைப்படுத்தி அவர்களுக்கு பட்டங்கள் கொடுத்து ஹீரோக்களாக மாற்றும் பழக்கத்தை வைத்திருப்பதை கடந்த காலங்களில் பார்த்தோம்.
சேவாக்போல வருவார், அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதுபோல ஜெய்ஸ்வாலை பாராட்டி அழுத்தத்தை உண்டாக்கி அவரின் கெரியரை முடித்து விடாதீர்கள். அப்படி எதிர்பார்ப்பு ஏற்படும்போது வீரர்கள் தங்களுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுத்தத்தை சந்திக்கிறார்கள். எனவே கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடி அவரை வளர விடுங்கள்" என்று கூறினார்.