துருவ் ஜூரெல் அபாரம்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட்


துருவ் ஜூரெல் அபாரம்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட்
x

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர் துருவ் ஜூரெல் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. 31-வது சதம் விளாசிய ஜோ ரூட் 106 ரன்களுடனும், ஆலிராபின்சன் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. முடிவில் 104.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜோ ரூட் 274 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 122 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஆர்.அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அதில் இந்திய வீரர்கள் துருவ் ஜூரெல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் குல்தீப் யாதவ் 28 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக துருவ் ஜூரெலுடன் ஆகாஷ் தீப் ஜோடி சேர்ந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துருவ் ஜூரெல் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். பின்னர் இந்த ஜோடியில் ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக துருவ் ஜூரெலுடன் முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தார்.

பின்னர் சதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தநிலையில் துருவ் ஜூரெல் 90 ரன்களுக்கு (6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். இங்கிலாந்து அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தற்போது இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 46 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.


Next Story