கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை கிடையாது என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே தோனி புரிந்து கொண்டார் - இந்திய முன்னாள் வீரர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
மும்பை,
2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு இதுவே கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை அணிக்கு புதிய கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் தோனி மேலும் 5 ஆண்டுகளோ அல்லது குறைந்தது 2-3 வருடங்களாவது தொடர்ந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என இந்திய முன்னாள் சுரேஷ் ரெய்னா கூறியிருந்தார்.
இந்நிலையில் தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் ஜாகீர்கான் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீங்கள் ஒரு வீரராக விளையாடும் போது, அதில் இருந்து விடைபெறுவது என்பது முக்கியமான ஒன்று. உங்கள் வாழ்க்கையின் அனைத்தும் கிரிக்கெட்டாக இருக்க முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில் விலகித்தான் ஆக வேண்டும்.
விளையாட்டுக்கே எல்லாவற்றையும் அளித்திருக்கும் நிறைய வீரர்கள் ஓய்வுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தடுமாறுவார்கள். ஆனால் தோனியை பொறுத்தவரை, கிரிக்கெட் தனது வாழ்க்கையில் ஒரு அங்கம்.
கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை கிடையாது என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே புரிந்து கொண்டார். அதனால் தான் கிரிக்கெட்டை தாண்டி மற்ற விஷயங்களையும் செய்கிறார். உதாரணமாக, மோட்டார் சைக்கிள் என்றால் அவருக்கு அலாதி பிரியம். அவற்றை எல்லாம் எப்போதும் ஆராய்ந்து கொண்டே இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.