முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி - ரோகித் சர்மா
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஞ்சி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 353 ரன்கள் எடுத்தது. இதையத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த தொடர் உண்மையிலேயே ஒரு கடினமான தொடராக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
முதல் நான்கு போட்டிகளின் முடிவில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. எங்களது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள். இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம்.
இருப்பினும் தற்போது கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது.
முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர்.
எனக்கும் டிராவிட் பாய்க்கும் இளம் வீரர்களுக்கு சரியான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் இளம்வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். துருவ் ஜுரேல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அவர் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் அவரது முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிக்காட்டியிருந்தது.
அவரிடம் தெளிவான நல்ல ஷாட்டுகள் இருக்கின்றன. முதல் இன்னிங்சில் அவர் அடித்த 90 ரன்களே எங்களை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் அழைத்துச் சென்றது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சுப்மன் கில்லுடன் அமைத்த பாட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.