தோல்வி எதிரொலி... பேட்ஸ்மேன்கள் மீது ஐதராபாத் கேப்டன் மார்க்ரம் பாய்ச்சல்


தோல்வி எதிரொலி... பேட்ஸ்மேன்கள் மீது ஐதராபாத் கேப்டன் மார்க்ரம் பாய்ச்சல்
x

எங்களது பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என மார்க்ரம் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுத்து 5-வது தோல்வியை சந்தித்தது. இந்த சீசனில் 20 ஓவர்கள் முழுமையாக அரங்கேறிய ஒரு ஆட்டத்தில் இரு அணிகளை சேர்ந்த ஒருவர் கூட அரைசதம் அடிக்காதது இதுவே முதல்முறையாகும். 34 ரன்களுடன், 2 விக்கெட்டும் எடுத்த டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறும் போது 'நாங்கள் மீண்டும் பேட்டிங்கில் நன்றாக செயல்படவில்லை. எங்கள் வீரர்களிடம் போதுமான தீவிரம் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ஒரு போட்டியில் வெல்லக்கூடிய உத்வேகம் இல்லாத அணி போல் நாங்கள் தெரிகிறோம். இலக்கை விரட்டும் (சேசிங்) போது சிறப்பாக செயல்படுவது எப்படி என்பது குறித்து நாங்கள் கலந்து ஆலோசிப்பதுடன், ஒரு அணியாக சுதந்திரமாக களத்தில் செயல்பட வேண்டும். அது தான் அணியின் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

நீங்கள் சரியான விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்லலாம். ஆனால் களத்தில் இருக்கும் வீரர்கள் தான் அதை செயல்படுத்த வேண்டும். அச்சமின்றி ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்ற எண்ணம் இல்லாததே எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகிறேன்.

எங்களது பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். அதே நேரத்தில் பந்துவீச்சாளர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். நாங்கள் வகுத்த திட்டங்களை களத்தில் அவர்கள் அருமையாக நடைமுறைப்படுத்தினர். ஆனால் பந்துவீச்சாளர்கள் செய்த பணிக்கு எங்கள் பேட்ஸ்மேன்களால் கைமாறாக எதுவும் செய்ய முடியவில்லை.' என்றார்.


Next Story