இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர், ஹேசில்வுட் விலகல்
ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் விலகிய நிலையில் வார்னரும் தொடரில் இருந்து ஒதுங்கி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது
புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிப்பதுடன், பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தன்வசப்படுத்தியது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மார்ச் 1-ந் தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் மார்ச் 9-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நேற்று விலகி இருக்கிறார். டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் முதலாவது நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து டேவிட் வார்னரின் ஹெல்மெட்டில் தாக்கியது. அடுத்த இரண்டு ஓவர்களில் அவர் வீசிய மற்றொரு பந்து அவரது இடது முழங்கையை பதம் பார்த்தது.
சிகிச்சை பெற்று தொடர்ந்து ஆடிய அவருக்கு முழங்கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது. அத்துடன் ஹெல்மெட்டில் பந்து தாக்கியதில் தலையில் அதிர்வு ஏற்பட்டதால் வார்னர் பீல்டிங் செய்ய களம் இறங்கவில்லை. வார்னருக்கு பதிலாக மேட் ரென்ஷா அணியில் இடம் பெற்றார்.
வார்னர் காயம் விவகாரத்தில் அவசரம் காட்டமாட்டோம். மருத்துவ குழுவினரின் ஆலோசனையின்படி நடப்போம் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்து இருந்தார்.
வார்னர் விலகல்
ஆனால் வார்னருக்கு இடது முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் நாடு திரும்பி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி மார்ச் 17-ந் தேதி மும்பையில் நடக்கிறது. அதற்கு முன்பாக வார்னர் இந்தியாவுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் விலகிய நிலையில் வார்னரும் தொடரில் இருந்து ஒதுங்கி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. வார்னர் ஆடாததால் 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். எனவே எஞ்சிய இரண்டு டெஸ்டில் அவர் தொடக்க வீரராக களம் காணுவார் என்று தெரிகிறது.