கடந்த சீசன் வரை சி.எஸ்.கே. அணியின் நெட் பவுலர்... இன்று ஆட்ட நாயகன் - நிதிஷ் ரெட்டி குறித்து ஆகாஷ் சோப்ரா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு எதிராக ஐதராபாத் அணி வீரர் நிதிஷ் ரெட்டி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மும்பை,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் முலம் 2 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுவரை ஐ.பி.எல். தொடரில் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத இவர் குறித்து தற்போது ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நிதிஷ் ரெட்டி குறித்து இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பேசுகையில், "ஐ.பி.எல். ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டவர் நிதிஷ் ரெட்டி. ஐதராபாத் அணியின் பேட்டிங் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்தபோது, 150 ரன்கள் எடுப்பதே சந்தேகமாக பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி அசத்திவிட்டார். இவர் கடந்த சீசன் வரை சி.எஸ்.கே. அணியின் நெட் பவுலராக செயல்பட்டவர். இன்று ஐதராபாத் அணியின் ஆட்ட நாயகன்.
ஐ.பி.எல். தொடரின் வரலாற்றில் இந்திய வீரர்களில் பினிஷர் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடலாம். அதன் காரணமாகவே பினிஷர்களுக்கு அதிக தொகை கொடுக்க ஐ.பி.எல். அணிகள் முன் வருவார்கள். ராகுல் திவேட்டியா, ஷிவம் துபே, ஷஷாங்க் சிங், ஆகியோரின் வரிசையில் இப்போது நிதிஷ் ரெட்டியையும் சேர்த்து கொள்ளலாம்" என்று கூறினார்.