சென்னை அணியின் உத்வேகம் எங்களுக்கு பெரிதும் உதவியது: இலங்கை கேப்டன் ஷனகா
சி.எஸ்.கே. அணியின் உத்வேகம் இலங்கை அணிக்கு உதவியாக இருந்ததாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் பெற்றது.
இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது. 2-வது ஆடிய அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் இறுதிப் போட்டியில் 2-வது ஆடிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் ஆடிய இலங்கை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.
இதுகுறித்து இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியதாவது- 2021-ம் ஆண்டு இதே துபாய் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. அணி கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி கோப்பையை வென்றது. சி.எஸ்.கே. முதலில் ஆடி இந்த வெற்றியை பெற்றது. இது எனது மனதில் இருந்தது.
இதுபற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். சி.எஸ்.கே. அணியின் உத்வேகம் இலங்கை அணிக்கு உதவியாக இருந்தது. ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அவர்களுக்கு நான் கண்டிப்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த நாட்டில் விளையாடியது போல் ரசிகர்களின் ஆதரவு இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.