உலகக் கோப்பை கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!


உலகக் கோப்பை கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!
x

image courtesy: Proteas Men twitter

47.3 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ், இப்ராஹிம் இருவரும் முறையே 25 ரன்கள் மற்றும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஹ்மத் ஷா மற்றும் நூர் அஹமது தலா 26 ரன்கள் எடுத்தனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய குயின்டன் டி காக் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் டெம்பா பவுமா 23 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரசி வான்டர் டுசன் அதிரடியாக விளையாடி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெலக்வாயோ 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் 47.3 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதையடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.


Next Story