உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் வெற்றி இலக்கு
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆமதாபாத்,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. அதில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணியின் சார்பில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் ஆகியோர் முதலில் களமிறங்கினர். இந்த ஜோடியில் டேவிட் மலான் 14 ரன்களில் வெளியேற அவரைத்தொடர்ந்து பேர்ஸ்டோ 33 ரன்களும், ஹேரி புரூக் 25 ரன்களும், மொயின் அலி 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து லிவிங்ஸ்டன் 20 ரன்களும், ஜோ ரூட் 77 ரன்களும், கிரிஸ் வோக்ஸ் 11 ரன்களும், சாம் கரண் 14 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் அடில் ரஷித் 15 ரன்களும், மார்க் வுட் 13 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹென்றி 3 விக்கெட்டுகளும், சாண்ட்னர் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.