இந்தியாவில் 8 டெஸ்ட் போட்டிகளில் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லும் பணியை செய்தேன் - உஸ்மான் கவாஜா


இந்தியாவில் 8 டெஸ்ட் போட்டிகளில் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லும் பணியை செய்தேன் -  உஸ்மான் கவாஜா
x

Image Courtesy: AFP 

இந்தியாவுக்கு எதிராக ஆமதாபாத்தில் நேற்று தொடங்கிய கடைசி டெஸ்டில் கவாஜாவின் சதத்தால் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம் பெற்றுள்ளது.

அகமதாபாத்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லபுஸ்சேன் 3 ரன்களில் அவுட்டானார். கேப்டன் ஸ்மித் 38 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த கேமரூம்ன் கிரீன் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். மறுபுறம் உஸ்மான் கவாஜா தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 ஆவது சதமடித்து அசத்தினார். அவர் 251 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். கிரீன் 64 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

6 மணி நேரம் களத்தில் நின்று சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா கூறுகையில்,

'இது ஒரு உணர்வுபூர்வமானது. நீண்டதொரு பயணத்திற்கு பிறகு கிடைத்த சதம் இது. ஒரு ஆஸ்திரேலிய வீரராக இதை எப்போதும் செய்ய விரும்புகிறேன். 2013 மற்றும் 2017-ம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது எனக்கு ஒரு டெஸ்டில் கூட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உனக்கு சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ள தெரியாது என்று கூறி தட்டிக்கழித்தனர்.

இதனால் 8 டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தில் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்லும் பணியை செய்த பிறகு இந்த பயணத்தில் ஒரு வழியாக களம் காணும் வாய்ப்பை பெற்றேன். இது ஒரு அருமையான ஆடுகளம். அதனால் விக்கெட்டை எளிதில் இழந்து விடக்கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டேன்' என்றார்.

36 வயதான உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story