ஒரு மாதம் நிறைவு பெற்றும் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து வெளிவர முடியவில்லை - ரோகித் சர்மா
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை,
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியும் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை வெல்ல முடியாததால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்திலேயே கண்கலங்கினார்கள்.
இந்நிலையில் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என தெரியவில்லை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;- " சுமார் ஒரு மாதம் நிறைவு பெற்றும் உலகக்கோப்பை தோல்வியிலிருந்து வெளிவர முடியவில்லை. தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என்பதற்கான ஐடியா என்னிடம் இல்லை. முதல் சில நாட்களில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சமயங்களில் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றியிருந்தது ஓரளவு உதவியாக இருந்தது. அதை ஜீரணிப்பது எளிதல்ல. ஆனால் வாழ்க்கை நகர்வதால் நீங்களும் வாழ்க்கையுடன் நகர வேண்டும்.
உண்மையாக அதிலிருந்து நகர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் நான் 50 ஓவர் உலகக்கோப்பையை பார்த்து வளர்ந்தேன். 50 ஓவர் உலகக்கோப்பை என்பதுதான் நான் வெல்ல விரும்பிய மகத்தான பரிசு. இதற்காக கடந்த பல வருடங்களாக உழைத்தும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. அதனால் இப்போது அதை நினைத்தாலும் ஏமாற்றமும் எரிச்சலும் வருகிறது. ஏனெனில் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் வெற்றிக்காக கொடுத்தோம். ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதை நான் சொல்வேன்'' என்று கூறினார்.