அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது - தோல்விக்கு பின் பாபர் அசாம் பேட்டி


அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது - தோல்விக்கு பின் பாபர் அசாம் பேட்டி
x

Image Courtesy: @TheRealPCB

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் பந்துவீச்சில் நன்றாகவே செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தோம். எங்களது பேட்டிங்கில் அதிக டாட் பந்துகள் இருந்தது. பத்து ஓவர்களுக்கு பிறகு அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். நாங்கள் பத்து ஓவர்களில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்கின்ற அளவில் எடுத்திருந்தோம்.

ஆனால் அடுத்த பத்து ஓவர்களில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கொடுத்து விட்டோம். கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. எங்களுடைய உத்திகள் எளிமையானது. முதல் ஆறு ஓவர்களை பேட்டிங்கில் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக இருந்தது.

முதல் ஆறு ஓவர்களில் 40 முதல் 45 ரன்கள் எடுக்க திட்டமிட்டோம். பந்துகள் கொஞ்சம் மெதுவாகவும் பவுன்ஸ் ஆகியும் வந்தன. டிராப் இன் ஆடுகளத்தில் இது எதிர்பார்த்ததுதான். தோல்வி குறித்து உட்கார்ந்து பேசுவோம். அடுத்த இரண்டு போட்டிகளுக்கு தயாராவோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story