பட்லர், ஜெய்ஸ்வால், சாம்சன் அதிரடி: ராஜஸ்தான் 203 ரன்கள் குவிப்பு...!
ராஜஸ்தான் தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 22 பந்தில் 54 ரன்கள் எடுத்தார்.
ஐதராபாத்,
16வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் கடந்த 31ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ஐதராபத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் யயஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடியில் மிரட்டிய இந்த இணையால் அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
வெறும் பவுண்டரி, சிக்சர்களில் மட்டுமே மிரட்டிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 85 ரன் குவித்த நிலையில் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 22 பந்தில் 54 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 37 பந்தில் 54 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய தேவ்தத் படிக்கல் 2 ரன்னிலும், அடுத்த வந்த ரியான் பராக் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷிம்ரன் ஹெட்மையர் சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம்சன் 28 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 32 பந்தில் 55 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ரவிச்சந்திரன் அஷ்வின் களம் புகுந்தார்.
இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் பட்லர் 54 ரன், ஜெய்ஸ்வால் 54 ரன், சாம்சன் 55 ரன் எடுத்தனர். இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் ஆட உள்ளது.