அந்த சமயத்தில் பும்ரா பந்துவீச்சை அடிக்க வேண்டும் - பேட்ஸ்மேன்களுக்கு இலங்கை முன்னாள் வீரர் ஆலோசனை


அந்த சமயத்தில் பும்ரா பந்துவீச்சை அடிக்க வேண்டும் - பேட்ஸ்மேன்களுக்கு இலங்கை முன்னாள் வீரர் ஆலோசனை
x

மகத்தான பும்ராவுக்கு பேட்ஸ்மேன்கள் மரியாதை கொடுத்து விளையாட வேண்டும் என சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார்.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார். அதனால் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி பாராட்டினார்.

மேலும் துல்லியமாக பந்து வீசுவார் என்ற பயத்தை பேட்ஸ்மேன்கள் மனதில் பும்ரா உருவாக்கியுள்ளதாக ஜாம்பவான் வக்கார் யூனிஸ் பாராட்டினார். எனவே பும்ரா சுமாராக பந்து வீசினால் கூட அதை பேட்ஸ்மேன்கள் அடிக்க யோசிப்பார்கள் என்றும் அவர் சமீபத்தில் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் மகத்தான பும்ராவுக்கு பேட்ஸ்மேன்கள் மரியாதை கொடுத்து விளையாட வேண்டும் என இலங்கை முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார். ஆனால் பும்ராவும் மனிதர் என்பதால் சில நேரங்களில் சுமாராக பந்து வீசுவார் என்று அவர் கூறியுள்ளார். அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் அடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"பும்ரா மிகவும் தனித்துவமான பவுலர். எனவே அவரையும் அவருடைய திறமையையும் நாம் மதிக்க வேண்டும். குறிப்பாக அவருடைய நாளில் நீங்கள் அவரை மதிக்க வேண்டும். ஆனால் அவரும் சிறப்பாக செயல்படாத நாட்கள் இருக்கும். அந்த சமயத்தை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு அடிக்க வேண்டும். அவரைப் போன்ற பவுலர் பெரும்பாலான நேரங்களில் உச்சத்திலேயே இருப்பார்கள். ஏனெனில் அவரை போன்ற பவுலர்கள் நாம் எதை செயல்படுத்த வேண்டும் என்பதை மிகவும் புத்திசாலித்தனமாக சிந்திப்பார்கள்" என்று கூறினார்.


Next Story